சமுதாயம சார்ந்த கட்டுரை

தேவர் பட்டம் கொண்ட முத்தரையர்கள் - Published on 2013-10-23

தேவர் அல்லது தேவன் எனும் சொல்லுக்கு இறைவன், வேந்தன் என்று பொருள். எப்படி கோவில் என்பது இறைவனின் வாசஸ்தலத்தையும், அரசனின் குடியிருப்பையும் குறிக்குமோ அது போல தேவன் என்ற சொல்லும் இறைவனையும், இறைவனோடு ஒப்பிட்டு மன்னனையும் குறிக்கும் பட்டமாகும். பாரத தேசம் முழுவதும் பல மன்னர்களும் சான்றோர்களும், பல்வேறு காலங்களில் ‘தேவர்’ எனும் பட்டம் பெற்றிருந்தனர். இது பலரால் விரும்பி எற்றுக்கொள்ளப்பட்டும் பிறரால் கொடுக்கப்பட்டும் வழங்கலாயிற்று.

அவ்வரிசையில் தமிழகத்தில் முத்தரையர், வன்னியர், முக்குலத்தோர், நாயக்கர் போன்றோருக்கு தேவர் பட்டம் உண்டு. முத்தரையர் குலத்தில் தானைத் தலைவர்கள் பலரும் தேவர் எனும் பதத்தினை தங்களின் (சிறப்புப்) பெயராகவும் பட்டமாகவும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலரை கீழே காணலாம்.

1.) திருக்கண்ணப்ப தேவர்:

‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ எனும் பெயரில் பதினோறாம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களான நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று, கல்லாட தேவ இயற்றியது மற்றொன்று. எதிரிகளை வெல்வது ஒருவகை மறம். கண்ணப்பர் தன் கண்ணைத் தானே பிடுங்கித் தந்தது 'கொடைமறம்'. இக் கொடைமறத்தைத் திருமறமாக்குகிறது இந்நூல். பொத்தப்பி நாட்டு உடுப்பூரில் வாழ்ந்த வேடன் திண்ணன். அப்பர் (சிவன்) கண்ணை நிரப்ப, தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார். இவரே ஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனாரான "திருக்கண்ணப்ப தேவர்" என்னும் இந்நூலின் பாட்டுடைத்தலைவன். கண்ணப்பர் முத்தரையர்களின் முன்னோர்களில் ஒருவர் என்பதும் அறுபத்து மூவரில் இறைவன் மேல் ஒப்பில்லா அன்பு கொண்டவர் என்பதும் நாம் அறிந்ததே. கண்ணப்பரை ஓரிரு வரிகளல்ல இரண்டு நூல்களே ‘தேவர்’ எனப் போற்றுகின்றன.

2.) வல்லவரையர் வந்தியத்தேவன்:

வல்லவரையர் வந்தியத்தேவன் முத்தரையர் குலத்தவன் என்றும் வாணர்குல வல்லத்துச் சிற்றரசன் என்றும் பொன்னியின் செல்வன் நூலில் கல்கி கூறுகிறார். வல்லவரையன் எனும் பட்டம் முத்தரையர் குலத்தில் இருந்ததற்கான சான்று அரையபுரம் (தஞ்சை) கல்வெட்டு.

3.) அரையத் தேவன் மூவாயிரத் தொருவன், அரையத் தேவன்:

இடம்: திருவானைக்காவல் (திருச்சி மாவட்டம்) வீர ராஜேந்திர பிரம்மாதராய முத்தரையனுக்கு அரையத் தேவன் மூவாயிரத் தொருவன் என்ற சிறப்புப் பெயருண்டு. இவனது தம்பி அரையத் தேவன். இவர்களுடன் மொத்தம் ஐந்து நாடாள்வார்கள் சேர்ந்து, சோழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அருகிலுள்ள நாடுகளை இணைத்துக் கொண்டனர்.

4.) அருமொழி தேவன்:

இடம்: தஞ்சை கோனேரி ராஜபுரம் கோவில் அதனூரைச் சேர்ந்த அருமொழி தேவன் (சிறப்புப் பெயர்) என்ற வயநாட்டரையர். கோனேரி ராஜபுரம் கோவிலுக்கு திருநடை மளிகை கட்டியவர்.

5.) சூற்றிய தேவன்:

காலம்: கி.பி. 1129-1130 இடம்: திருவக்கரை (விழுப்புரம் மா.வ.) கருணாகரச் சோழ முத்தரையன் ‘சூற்றிய தேவன்’ எனும் பட்டங் கொண்டவன். இவனும் இவன் சகோதரனும் மாம்பாக்கம் போரில் இறந்துள்ளனர்.

6.) ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவன்:

காலம்: கி.பி. 1226 இடம்: கொளக்காநத்தம் (பெரம்பலூர் மா.வ.) ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான். இவ்வரசியல் தலைவன் பாசன வசதிக்காக தூம்பு செய்வித்துள்ளான்.

7.) பெரிய தேவன்:

காலம்: வீர ராஜேந்திரன் காலம் இடம்: பட்டலூர் (ஈரோடு மா.வ.) பட்டலூர் வாகேச்வரமுடையார் கோவிலில் பெரிய தேவன் மகன் பிள்ளையன், மூன்று சந்தியா தீப விலக்கெறிக்க பஞ்சலாகை ஒன்று கொடையளிதுள்ளான். கல்வெட்டு இவனை கொடும்பாளூர் வேட்டுவரில் என்கிறது.

8.) சூரைக்குடி அரசு விசையாலயத் தேவர்:

காலம்: மதுரை நாயக்கர் காலம் இடம்: கண்டீஸ்வரர் கோவில் (புதுக்கோட்டை மா.வ.) இதில் காணப்படும் வயிரவ விசையாலயத் தேவர் திருவிடையார்பட்டி கோவில் கல்வெட்டில் விசையாலய முத்தரையர் எனக் குறிக்கப்படுகிறார். இவர் தலைமையில் சிலருக்கு சொத்துரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

9.) (வடக்கிலரையன் மகன்) தேவன்:

காலம்: கி.பி. 5-1-1382 இடம்: கோவிலூர் (புதுக்கோட்டை மா.வ.) தெற்கிலரையர்களுக்கும் வடக்கிலரையன் மகன்களான தேவன், சாத்தனுக்கும் பகை ஏற்பட்டு கொலைகள் நடந்து, பின்பு பகை நீங்கி, இனி பழிவாங்குதல் இல்லையென்றும் மீறினால் பல அபாராதங்களுக்கு உட்பட வேண்டுமென்றும் கல்வெட்டப்பட்டுள்ளது.

10.) (சோழப் பெரியரையன் மகன்) தேவன்:

காலம்: கி.பி. 1142 இரும்பேடு நாட்டு செல்வப் பேரரையனும் ஆழிச்சிப் பாக்கம் சிங்கனான தொண்டைமானும் பாரி வேட்டைக்குச் சென்றுள்ளனர். வேட்டையின் போது, தேவன் தவறுதலாக அம்புபட்டு இறந்தான். தேவனின் ஆண்மா சாந்தியடைய வேண்டி, நந்தா விளக்கு வைத்து அதைத் தொடர்ந்து பராமரித்துவர 15 பசுக்கள் கொடையளிக்கப்பட்டுள்ளது.

11.) வாமதேவ முத்தரையர்:

காலம்: கி.பி. 1578 இடம்: ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை மா.வ.) இக்கோவிலின் நாடக, கலை நிகழ்சிக் கூடமான கனகசபை மண்டபத்தை முழுப் பொறுப்பேற்றுக் கட்டிமுடித்தவர் வாமதேவ முத்தரையர்.

12.) புதுவூர் தேவன், முடிகாத்த தேவன்:

காலம்: கி.பி. 1480 இடம்: நெடுங்குடி கைலாசநாதர் கோவில் (புதுக்கோட்டை மா.வ.) சில முத்தரைய நாடுகள் கூடிப் பேசுகையில், இடையில் ஏதோ பூசல் ஏற்பட்டு விசையரையனும், புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவரையர் படையின் துணையுடன் கலகம் செய்து 20 பேரை வெட்டியுள்ளனர். இவர்களுக்கு தண்டனையாக நிலம் தலா ஒரு மா வீதம் தெண்டமாகப் பெறப்பட்டது. கல்வெட்டில் புதுவூர் தேவன், அழகன், முடிகாத்த தேவன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

13.) சோழங்கத் தேவன்:

இடம்: கீரனூர் (புதுக்கோட்டை மா.வ.) விக்கிரம முத்தரைய தயாலெனின் சக அதிகாரி சோழங்கத் தேவன்.

14.) வண்ணக்கண் ஆதித்த தேவன் ஒற்றிக் கொண்டான்:

காலம்: கி.பி. 1156 இடம்: மகரால் (காஞ்சி மா.வ.) மழவன் கூத்தன் கனியன், வெண்மைக் கிழவன் நம்பி உதையஞ் செய்வான், மத்திச் செல்வன் கூத்தன், சோபுரனா வலையன், கல்லைக் கிழான் திருவன் உடையான், திருவையாறன் நாவலையன், அத்தியூரன் பிச்சன், வண்ணக்கண் ஆதித்த தேவன் ஒற்றிக் கொண்டான், மத்தி பெற்றான், உதையஞ் செய்தான் ஆகியோருக்கும் மங்கலக் கிழான் திருவன் செல்வனுக்கும் மனப்பூசல் ஏற்பட்டு மங்கலக் கிழான் இறந்தான். இதற்கு பிராயச்சித்தமாக இவர்கள் இவ்வூர் கோவிலில் நந்தா விளக்கொன்று வைத்து, அதைப் பராமரிக்க 1000 குழி நிலம் விட்டுள்ளனர். இதிலுள்ள அனைவரும் முத்தரையராவர். இவைகள் மட்டுமின்றி, முத்தரையர் குலத்தில் சில (கரை, கூட்டம், பரம்பரை, கிளை போன்ற) பங்காளி வகையறா பெயர்களிலும் தேவன் எனும் சொல் இடம் பெற்றிருக்கும். இன்னும் கல்வெட்டு, ஓலைச்சுவடி சாசனங்களில் இடம் பெறாத எத்தனையோ முத்தரையர்கள் தேவர் பட்டம் பெற்றிருந்தனர். இன்றைய சம காலத்திலும் ஒரு உதாரணம்,

15.) வழுவாட்டித் தேவர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி - ஜெயநகரம் ஜெமின்தார் குடும்பத்தினருக்கு “வழுவாட்டித் தேவர்” என்பது குடும்பப் பட்டமாகும்.

(Source: Mutharaiyar Peyar Kalanjiyam, Websites and so on)நன்றி
ரா.விமல்.