சமுதாயம சார்ந்த கட்டுரை

முத்தரையர் கட்டிய 8-ஆம் நூற்றாண்டு மலையடிப்பட்டி ரெங்கநாதன் குடவரை கோயில் - Published on 2013-10-31

திருச்சி இருந்து புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கீரனூரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். திருவாலத்தூர் என்று கல்வெட்டில் இருக்கிறது தற்போது மலையடிப்பட்டி என்று அழைகின்றனர். சிறு ஊரு தான் என்றாலும் பல்லவர்களும் முத்தரையர்களும் சேர்ந்து ஒரு அருமையான குடைவரைகோவிலை வடித்துள்ளனர்.மூலவர் அரங்குளநாதர். முழுக்க முழுக்க வண்ணம்பூசபட்ட குகைமுழுக்க மூலிகை வண்ண ஓவியங்களுடன் இன்றும் அருமையாக இருக்கிறது. ஒரு வேலை நகரத்து மக்களிடம் இருந்து சற்றே விலகி இருப்பதால் என்னமோ இன்றும் அதே வண்ணத்துடன் திகழ்கிறது.

இது 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்றும் தந்தி வர்மன் மற்றும் முத்தரையர் வம்சாவழியில் வந்த குவாவன் என்ற சிற்றசனால் உருவாக்கப்பட்டது என்றும் இதற்கான தகவலை வரலாற்று.காம் என்று இணையதளத்தில் இருந்து விபரங்களை பெறலாம்.

நான் ஆவலுடன் பார்க்கசென்ற போது எனக்கு புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை.கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றுவரை அதே வண்ண ஓவியங்களும் ரெங்கநாதர் மீது குடைபோல் இருக்கும் ஐந்து தலை நாகத்தில் தீட்டப்பட்ட வண்ணங்களும் இன்றும் அதே பொலிவுடன் இருக்கிறது. அதன் அருகில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது இரண்டும் சமகாலத்தில் குடையப்பட்ட கோவில்கள்.

பெருமாளின் சயன கோலம் இந்த திருமேனி தமிழ்நாட்டில் திருமெய்யம் (திருமயம்)-மலையடிப்பட்டி-சிங்காவரம்-திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கநாதர் கோவில் ஆகிய இந்த இடங்களில் மட்டுமே காணாலம். இதில் மூன்று குடைவரை கோவில்கள் பல்லவர்களின் கலைத்திறமைக்கு இதெல்லாம் சான்று. இங்கு துவாரபாலகர் சிலைகளில் எந்த ஆயுதமும் இல்லாமல் மலர்களை கைகளில் வைத்துள்ளனர். இரண்டு கைகளுடைய துவாரபாலகர் சிலை இங்கு தான் காணமுடியும். குடைவரைக்குள் மேல் சுவற்றில் கிருஷணர், திருமாலின் அவதாரங்கலை வண்ண ஓவியங்களாய் வரைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் பழமையான சயனதிருக்கோலங்களில் ஒளிபதி மூர்த்திக்கு தனி இடமுண்டு மாமல்லபுரம் -நாமக்கல்-சிங்காவரம்-திருமெய்யம் இந்த இடங்களில் அமைத்திருக்கும் சயனதிருக்கோலம் ஒத்த வடிவம் இந்த மலையடிப்பட்டி ரெங்கநாதர்க்கும் உண்டு. உள்புறத்தில் நுழைந்ததும் இரண்டு சிம்ம தூண்கள் பல்லவர்கள் அடையாளங்களை காட்டுகின்றனர். சோழர்கால கல்வெட்டும் இங்கு உள்ளது.

சிவன் குடைவரைகோவில் சப்தகன்னிமார்கள்,ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி அழகானவேளைபாடுடன் இருக்கிறது. பல்லவர்களில் கலைபானியில் துவாரபலகரின் சிலைகளை அதன் வடிவம், நிற்கின்ற தோரணை வைத்தே சொல்லிவிடலாம் குன்றண்டர்கோவில் இதற்க்கு ஒரு சான்று, பல்லவர்கள் சிற்பங்களில் கிரீடம் நீண்டும் நிறைய நுணுக்க வேலைப்பாடுடன் இருக்கும்.

பெரும்பாலான சிற்றரசர்களின் வாழ்க்கை வரலாறு அறியபடமலே போய்விட்டது. அவர்களின் கலை, பண்பாடு, அவர்களின் வாழ்க்கைமுறை ஏனோ தகவல்கள் கிடைக்கவில்லை.முத்தரையர்கள் அர்ப்பணிப்பை புதுக்கோட்டை சுற்றிலும் அமைக்கப்பட்ட கோவில்கள், குடைவரைகளில் இருந்து அறியலாம் இதெல்லாம் அவர்களை பற்றின சிறு அடையாளங்களே. எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டிய இடம் இந்த மலையடிப்பட்டி!

புதுக்கோட்டை கீரனூர் மற்றும் திருச்சி இருந்து இங்கு பேருந்து வசதிகள் உள்ளன. கீரனூர் சென்று அங்கிருந்து செல்வது இன்னமும் எளிது.

இடம் : மலையடிபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.நன்றி
வரலாற்று புதையல்